“நுபுர் சர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாக” கடும் விமர்சனம் செய்துள்ள உச்ச நீதிமன்றம், “தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

அதாவது, பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.வி. விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் நாயகம் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

இவை யாவும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளும் கொந்தளித்து வெகுண்டு எழுந்தது.

பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியது.

இது போதாதென்று, 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி, “இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்” என்று, ஐநாவுக்கு கோரிக்கை வைத்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த இந்தியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன.

இதன் காரணமாக, இந்திய - அரபு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் நட்புறவில் மிகப் பெரிய விரிசல் உருவாகும் சூழலும் ஏற்பட்டது. 

அத்துடன், பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக முக்கிய இஸ்லாமிய நாடுகளான ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்தியாவுக்குக் தங்களது பகிரங்கமான கண்டனத்தை தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் தான், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “என் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், நாடு முழுவதும் எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்ற வேண்டும்” என்று, நுபுர் சர்மா கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கானது, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,“நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாக” கடுமையாக விமர்சனம் செய்தனர். 

மேலும், “நுபுர் சர்மா, தன்னுடைய தேவையற்ற வார்த்தைகளால் நாடு முழுவதும் வன்முறை தீயை பற்ற வைத்து விட்டு உள்ளார் என்றும், நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? என்றும், நுபுர்சர்மாவின் சர்ச்சை பேச்சால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிக்கிறது” என்றும், நீதிபதிகள், மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர்.

முக்கியமாக, “தனது கருத்துக்கு நுபுர் சர்மா, தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர். 

குறிப்பாக, “நீதித்துறை சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றி பேச நுபுர் சர்மாவுக்கும் தொலைக்காட்சிக்கு என்ன வேலை? என்றும், உதய்பூர் படுகொலைக்கு நுபுர்சர்மாவின் பொறுப்பற்ற செயல்பாடுகளே முக்கிய காரணம்” என்றும், கடுமையாக விமர்சனம் செய்தனர். 

மிக முக்கியமாக, “ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதால், எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது என்றும், நுபுர் சர்மா அளித்த புகாரில் ஒருவரை துரிதமாக காவல் துறை கைது செய்தது என்றும், நுபுர் சர்மாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவானாலும் டெல்லி காவல் துறை கண்டுகொள்ளவில்லை” என்றும், கடுமையாகவே சாடினர்.

“நுபுர் சர்மா வழக்கு பற்றி இது வரை டெல்லி போலீஸ் என்ன செய்தது?” என்றும், நீதிபதிகள் காட்டமாகவே கேள்வி எழுப்பினர்.

“ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சு உரிமையை வழங்கி உள்ளது என்றும், அது ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது” என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, “தனக்கு எதிராக பிற மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றக் கோரிய மனுவை நுபுர் சர்மா வாபஸ் பெற்றுக் கொண்டார்” என்பது குறிப்பிடத்தக்கது.