தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா (B.1.1529) தொற்று வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதன் முதலில் உருவான கொரோனா வைரஸ் பல தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.

அதிலும் புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரசுக்கு இன்னும் பெயர் சூட்டப்படாதநிலையில், பி.1.1.529 என்ற அடையாள குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிற நோய்கள் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா வந்து அவர் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரில் உடலில் இந்த புதிய வகை கொரோனா வகை உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Ne variant corona virus india

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 22 பேரை புதிய வைரஸ் தாக்கி இருப்பதாக அந்நாட்டு அரசு கூறி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற பயணிகள் மூலம் ஹாங்காங், போர்ட்ஸ்வானா ஆகிய நாடுகளிலும் புதிய வைரஸ் பரவி இருக்கிறது. ஹாங்காங்கில் ஒருவருக்கும், போட்ஸ்வானாவில் 6 பேருக்கும் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வைராலஜிஸ்ட் நிபுணர் ஒலிவெய்ரா கூறியுள்ளார். ஏற்கனவே பரவி வரும் டெல்டா வைரஸ் 2 தடவையும், பீட்டா வைரஸ் 3 தடவையும் உருமாறி இருந்தன. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பி.1.1.529 கொரோனா 30 தடவை உருமாறி இருக்கிறது. 

இதனால்தான் வீரியம் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருப்பதால் தென் ஆப்பிரிக்காவில் இன்னும் சில வாரங்களில் பல ஆயிரம் பேரை தொற்று தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

புதிய கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் தாக்குகிறது. தென் ஆப்பிரிக்காவில் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் தான். இந்த புதிய வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? அதிக உயிரிழப்பை ஏற்படுத்துமா? என்பது இதுவரை தெரியவில்லை. அதன் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது.

New variant corona virus india

இந்த புதிய வைரசுக்கு கிரேக்க பெயர் சூட்டப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய 3 நாடுகளில் மட்டுமே பரவி இருப்பதால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பல நாடுகளும் கண்காணிக்க தொடங்கி உள்ளன. 

இதன் தாக்கம் அதிகமானால் 3 நாடுகளிலும் இருந்து வரும் பயணிகளுக்கு மற்ற நாடுகள் தடை விதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பிரிட்டன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்திற்கு தடைவிதித்துள்ளது. இதேபோல் இஸ்ரேல் நாடும், 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது. 

இந்தியாவும் புதிய வைரஸ் பரவல் குறித்து கவலை அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய 3 நாடுகளிலும் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி இந்தியா அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘3 நாடுகளில் இருந்தும் வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடத்தில் தீவரமாக பரிசோதிக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

இது சம்பந்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே 3 அலைகள் தாக்கி இருந்தன. இந்த மாத தொடக்கத்தில் தினசரி தொற்று சராசரியாக 100 என்று இருந்த நிலையில் இப்போது தினசரி தொற்று 1,200 ஆக உயர்ந்துள்ளது.

New variant corona virus

இதற்கு புதிய வைரசும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் 4-வது அலை அடுத்த மாதம் உருவாகலாம் என்று சுகாதாரத்துறை கூறி இருக்கிறது.

அங்கு புதிய வகை வைரஸ் தற்போது நாட்டின் தலைநகரம் பிரிட்டோரியா, ஜோகன்ஸ்பர்க், கவ்டெங்க் ஆகிய 3 நகரங்களில் தான் காணப்படுகிறது. விரைவில் கிறிஸ்துமஸ் விழாக்கள் அங்கு தொடங்கும். அப்போது மக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்வார்கள். எனவே இந்த தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பீட்டா வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் தான் தோன்றி உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரசும் உலகம் முழுவதும் பரவலாம் என்ற பீதி நிலவுகிறது.  அனைத்து நாடுகளும் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.