இந்தியாவில் பெண்கள் கருவுறும் விகிதம் முற்றிலுமாக குறைந்து உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“நவீன இந்தியப் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல், தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்” என்று, கடந்த மாதம் கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் கவலையுடன் கூறினார். 

ஆனால், இந்த கருத்துக்கு இயற்கையே ஆதரவு தருவது போல் தான், இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விசயத்தில் பெண்களின் தற்போதைய நிலையும் இருக்கிறது.

அதாவது, “இந்தியாவில் வரும் 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இன்னும் 23 கோடி மக்கள் அதிகமாக இருப்பார்கள் என்றும், அதே நேரத்தில்
வரும் 2027 ஆம் ஆண்டில் உலகின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், கடந்த 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 ஆக இருந்த கருவுறும் விகிதம், தற்போது 2.0 ஆக முற்றிலுமாக குறைந்து உள்ளதாக” அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

இதன் மூலமாக, இந்தியாவில் கருவுறும் விகிதம் முதன் முறையாக வழக்கமான அளவை விட கடுமையாகச் சரிந்து, கீழே சென்று உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வு என்.எச்.எப்.எஸ், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கார், அரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்,  உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதாக” குறிப்பிட்டு உள்ளது.

அதில், “நவீன கருத்தடை முறைகள் அதிகம் பயன்பாட்டில் இருப்பதால், வழக்கமான அளவுக்கும் கீழே சென்று உள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும்” கூறியுள்ளது. 

அத்துடன், “இந்தியாவில் மொத்த கருவுறும் விகிதம் 2.2 ல் இருந்து 2.0 ஆக சரிந்து உள்ளது என்றும், மிகக் குறைந்த அளவாக சண்டிகர் மாநிலத்தில் 1.4 ஆகவும் அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.4 ஆகவும் இருப்பதும்” இந்த ஆய்வின் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.

இவற்றுடன், “கருத்தடை பரவல் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக அதிகரித்து” இருக்கிறது.

அதே போல், “மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கும் விகிதம் 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. 

புதுச்சேரி மற்றும் தமிழகம் 100 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக, “3.1 சதவீத திருமணமான பெண்கள், தங்களது கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான பலவித வன்முறைக்கு ஆளாகிறார்கள்” என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.