துமகூரு அரசு கல்லூரியில் கல்லூரியில் பயிலும் 10 மாணவிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

hijab

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ம் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படிதெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் துமகூருவில் 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 மாணவிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்குள்ள அரசு ராணி ஜூனியர் பி யூ கல்லூரியில் பயிலும் 40 மாணவிகள் கடந்த புதன்கிழமையன்று பர்தா அணிந்து வந்ததால் உள்ளே அனுமதிக்கப்பட்டவில்லை. தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்காததை கண்டித்து  முழக்கமிட்டபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் பேரணியாக நடந்து சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.  

மேலும் அதனைத்தொடர்ந்து போலீஸ் துணை ஆணையர் கல்லூரி முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் ஆணையர் உத்தரவின் பேரில், கல்லூரி முதல்வர் போராட்டக்காரர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனினும் , மாணவிகளின் பெயர்கள் எதுவும் புகாரில் குறிப்பிடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனை போன்று சித்ரதுகாவில் அரசு பி.யூ மற்றும் எஸ்.ஆர்.எஸ் கல்லூரி நுழைவாயில் முன்பு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராடினர். தொடர்ந்து மாணவிகளுக்கும், பெண் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது. அதே போல, பெலகாவி நந்தகடாவில் உள்ள மகாத்மா காந்தி அரசு பி.யூ கல்லூரி மற்றும் பெலகாவி மருத்துவகல்லூரியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தபடி வகுப்பறைக்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது மகளிர் போலீசார் மாணவிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஐகோர்ட்டு உத்தரவை மீறி மாணவ-மாணவிகள் மத அடையாள ஆடைகளை அணிந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வழக்கு விசாரணையின் நேரலைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக ஹிஜாப் விவகாரத்தில், பெண் விரிவுரையாளர் ராஜினாமா செய்தது துமகூருவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.