நேற்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த ஏபிவிபி நிர்வாகிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது.

ABVP

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் வீடு முன் ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி நடத்திய போராட்டத்தில் 32 பேர் தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 29 பேரையும் 2022 பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் பொது ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி கைது செய்யப்பட்டார். இவர் தேசிய அளவில் ஏபிவிபி அமைப்பின் முக்கியமான உறுப்பினர் என்பதால் மொத்தமாக ஏபிவிபி அமைப்பினர் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிராக மேலும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் டெல்லியில் ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன் போராட்டம் நடத்தினர்.

தேசிய அளவில் இந்த கைது பற்றி கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனால் தமிழ்நாடு அரசு இந்த போராட்டத்தை பற்றி கவலைப்படவில்லை. ஏபிவிபி அமைப்பினர் டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எந்த விதமான சலசலப்பும் அடையவில்லை. அதோடு இல்லாமல் தமிழ்நாடு அரசு சார்பாக போராடிய 32 பேரில் 29 பேரின் பெயிலுக்கு எதிராக கடுமையாக வாதம் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று இவர்களின் பெயில் மீதான வாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த 29 பேரில் 12 பேர் பொய்யான விலாசம் கொடுத்துள்ளனர். இதை காரணமாக காட்டி தமிழ்நாடு போலீஸ் இவர்களுக்கு பெயில் கொடுக்க கூடாது என்று இன்று வாதம் வைக்க உள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட நிதி உள்ளிட்ட 29 பேர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. இவர்கள் இப்படி இரண்டு வாரம் ரிமாண்ட் செய்யப்படுவார்கள், தமிழ்நாடு அரசு அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஏபிவிபி எதிர்பார்க்கவில்லை.

தமிழ்நாடு அரசு வெறுமனே மண்டபம் ஒன்றில் அடைத்துவிட்டு விடுதலை செய்யும் என்றே ஏபிவிபி நிலைத்துள்ளது. ஆனால் போலீசோ அவர்களை ரிமாண்ட் செய்து, கோர்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைந்துள்ளது. மாணவிகள் உட்பட இத்தனை பேர் கைதாகி இருப்பது அந்த அமைப்பிற்கு அழுத்தத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே டெல்லியில் இருந்து ஏபிவிபி டீம் ஒன்று அவசரமாக நேற்று தமிழ்நாடு வந்தது.

ஏபிவிபி அமைப்பின் அகில இந்திய அமைப்புச் செயலாளா் ஆஷிஷ் சௌகான் தமிழ்நாடு வந்தார். அவர் தமிழ்நாட்டில் இருந்த ஏபிவிபி அமைப்பின் தென் இந்திய அமைப்புச் செயலாளா் ஆா்.குமரேஷ், இணை செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்தார். இவர்கள் மூவரும் ஆளுநர் ரவியை சந்திக்க உடனடியாக நேரம் ஒதுக்க கேட்டனர். ஆளுநர் உடனடியாக நேரம் ஒதுக்கிய நிலையில் அவர்கள் ஆளுனருடன் சந்திப்பு நடத்தினர்.

ஆனால் இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிதி உள்ளிட்ட எல்லோரையும் விடுதலை செய்ய அரசுக்கு ஆளுநர் ரவி கோரிக்கை விடுக்கும்படி இவர்கள் கேட்டனர். அதே சமயம் இன்னொரு முக்கியமான கோரிக்கையையும் ஆளுநரிடம் இவர்கள் வைத்ததாக கூறப்படுகிறது. 29 பேரை தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாணவ, மாணவியர். இதனால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்

மேலும், தமிழ்நாட்டில் மத மாற்றம் அதிகம் நடக்கிறது. பலர் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். கல்வி நிலையங்களில் இது அதிகம் நடக்கிறது. அரியலூர் மாணவி மரணத்தில் தமிழ்நாடு போலீஸ் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு இதில் அலட்சியமாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வலியுறுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசுக்கு எதிராக சில புகார்களை இவர்கள் வைத்துள்ளனர். இது தொடர்பான புகார் கடிதம் ஒன்றையும் ஆளுநரிடம் இவர்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.