வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள், தங்களது இந்திய மனைவிகளை கைவிடுவது தற்போது அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“காலம் மாறும், மனிதர்களும் மாறுவர்கள் என்பது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்!”

அப்படி மாறிவரும் மனிதர்களின்  எண்ண ஓட்டங்களின் அலைகளே இங்கே இந்த சமூகத்தில் செயல்களாக நடக்கிறது.

அதாவது, இந்தியாவில் கொரோனாவிற்கு முன்பும் சரி, கொரோனாவிற்கு பின்பும் சரி, வெளிநாட்டு மோகம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.

இது தொடர்பாக, இந்தியாவில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு தகவல் தான், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்கள் மனதில் பெரும் இடியாக இடித்திருக்கிறது அந்த தகவல்.

அதாவது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்வருமான கோவிந்தன் நம்பூதிரி என்பவர், கேட்டு கொண்டதன் பேரில் தகவல் ஒன்று அவருக்கு கிடைத்து உள்ளது. அப்படி, அவருக்கு கிடைத்த தகவல்கள் வெளியாகி தான், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 2156 இந்திய பெண்கள், வெளிநாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டிருப்பது” தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், “இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும்” இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

“இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 615 வழக்குகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 586 வழக்குகளும், சிங்கப்பூரில் 237 வழக்குகளும், சவுதி அரேபியாவில் 119 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்” தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்திருக்கின்றன.

இவைத் தவிர, “குவைத்தில் 111 வழக்குகளும், இங்கிலாந்தில் 104 வழக்குகளும், ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகளும், கனடாவில் 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு” இருக்கின்றன.

இப்படியாக, “பாதிக்கப்பட்டுள்ள இந்திய மனைவிகளுக்கு இந்திய சமுதாய நல நிதி சார்பில், இந்திய தூதரங்கள் மூலம் 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இது வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி சென்றடைய வில்லை” என்பதும், இதன் மூலமாக தெரிய வந்துள்ளது.

“இனி, வெளிநாடுகளின் திருமண சட்டத்தின்படி வழக்குகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கான நடைமுறை தீர்வு கொண்டுவரப்பட வேண்டியது முக்கியம் என்ற நிலையில், இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது, இது தொடர்பாக இனி அதிகம் பேசப்பட வேண்டும்” என்றும், இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள், தங்களது இந்திய மனைவிகளை கைவிடுவது தற்போது அதிகரித்து வருவதாக, இந்திய பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.