அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார்.

ahamathabad bomb blast

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பல்வேறு இடங்களில் சுமார் ஒருமணிநேரத்தில் 21 குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை, பஸ்கள், மோட்டார் சைக்கில்கள், கார்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள். 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 4 பேருக்கு எதிரான விசாரணை இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது. அவர்களை தவிர 77 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 8-ம் தேதி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் 49 பேர் குற்றவாளிகளாக நீதிபதி ஏ.ஆர்.படேல் அறிவித்தார்.

மேலும் கொலை, தேசதுரோகம் மற்றும் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது, வெடிப்பொருள் சட்டம் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 49 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து இந்நிலையில் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் 38 பேருக்கு தூக்குதண்டனை விதித்து நீதிபதி பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். எஞ்சிய11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.