மாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு கட்டாயப்படுத்தியதால் அதிர்ச்சி.. திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்ற மணமகள்!
By Aruvi | Galatta | Dec 15, 2020, 08:10 pm
மாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு கட்டாயப்படுத்தியதால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மணப்பெண், தனது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் வயது இளைஞருக்கும், அங்குள்ள கன்னாஜ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் பெற்றோரும், முறைப்படி பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்து அதன் படி நிச்சயிக்கப்பட்டது.
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பரேலி வந்தடைந்தனர்.
மணமக்கள் இருவரும் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ள நிலையில், வெகு விமரிசையாக இவர்களின் திருமணம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படியே, அதற்கான ஏற்பாடுகளும் தடல் புடலாக நடந்துகொண்டு இருந்தது.
அப்போது, மணமக்கள் இருவரும் மேடையில் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது, அங்கு மேடைக்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், மேடையிலேயே நடனம் ஆடி அட்டகாசம் செய்தனர்.
இதனையடுத்து, மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடையில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனால், அந்த மணப்பெண் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த செயலை மணமகளின் குடும்பத்தினர் கடுமையாக ஆட்சேபித்ததாகத் தெரிகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதனால், அந்த திருமண வீட்டில் அதிக அளவிலான பரபரப்பு எழுந்த நிலையில், நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு, மணமகள் தனது வீட்டிற்குத் திரும்பச் செல்ல முடிவு செய்தார்.
அதன் படியே, மணப்பெண்ணின் குடும்பத்தினர் சேர்ந்து பேசி இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்த நேரத்தில், மணமகளின் குடும்பத்தினருக்கு அவர்களின் கல்யாண செலவான சுமார் 6 லட்சம் ரூபாய் வரை திருப்பியளிக்க மணமகனின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன் பின்னர், வழக்கு எதுவுமில்லாமல் இந்த பிரச்சனையை போலீசார் முடித்து வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, மாப்பிள்ளையின் குடும்பத்தினர் பெண்ணின் உறவினர்களிடம் பேசி மிகவும் எளிய முறையில் இந்த திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், இதற்கு மணமகள் வீட்டில் ஒப்புக் கொள்ள முடியாது என்று, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மணப்பெண்ணின் தந்தை, “எனது மகளின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவளை மதிக்காத ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என என்னால் என் மகளைக் கட்டாயப்படுத்த முடியாது.
மேலும், “மணமகனின் நண்பர்கள் எனது சகோதரியிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும், எங்களது குடும்பத்தில் பொது இடங்களில் வைத்து பெண்களை ஆட அனுமதிக்க மாட்டோம்” என்றும், மணமகளின் சகோதரர் தெரிவித்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.