“இந்துத் தேசியம் என்பது, வர்ணாசிரமத் தேசியம்தான்! அதன் படியே புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ.மணியரசன் வெளியிட்டுள்ள சிறப்புக்கட்டுரையில், “மோகன் பகவத் - மோடி குழுவினர் கூறும் இந்து ராஷ்டிரம் (இந்துத் தேசியம்) என்பது, வர்ணாசிரமத் தேசியம்தான்! 

இந்த உண்மையை இப்போது இவர்கள் கொண்டு வந்துள்ள பெருங்குழும வேளாண்  
வேட்டைச் சட்டங்கள் மூன்றும் தெளிவாகத் தெரிவித்துவிட்டன” என்று, கூறியுள்ளார்.

“பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆரியர் வகுத்த நான்கு வர்ணங்கள், பஞ்சமர்கள் என்ற பிரிவும் சூத்திரர்களுக்குள் அடக்கம். இந்த நால் வருணத்தைத் தற்காலத்திற்கேற்ப மூன்று வர்ணங்களாகச் சுருக்கிக் கொண்டனர் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பண்டிதர்கள்! பிராமணர் - வைசியர் - சூத்திரர் என்று வரையறுத்துக் கொண்டனர். 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தற்காலப் பிராமணர்கள் தங்களைச் சத்திரியர்களாகவும் புத்துருவாக்கம் செய்து கொண்டனர். 

மதம் - வழிபாடு - பழக்கவழக்கப் பண்பாடு முதலிய ஆன்மிகத் தலைமை - ஆட்சித் தலைமை இரண்டையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; தொழில், வணிகம் முதலியவற்றை ஆரிய வைசியர்களின் முற்றுரிமை ஆக்கிக் கொள்ள வேண்டும். 

சத்திரியர்கள் - சூத்திரர்கள் - பஞ்சமர்கள் ஆகியோர் தற்காலத்திற்பே மூளை உழைப்பாளிகளாகவும், உடல் உழைப்பாளிகளாகவும் ஆரிய பிராமண - ஆரிய வைசிய வகுப்பாரின் தலைமைக்குக் கீழ் செயல்பட வேண்டும். 

முசுலிம்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையாய் உள்ள மதத்தினர் ஆரிய பிராமண - ஆரிய வைசிய - ஆரிய இந்துராஷ்டிரத் தலைமைக்குக் கீழ்ப்பட்ட ஒட்டுக் குடிகளாக வாழ வேண்டும் என்பவையே இந்துத்துவா எனப்படும் ஆரியத்துவாவின் வேலைத் திட்டம்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில், பிராமணரல்லாத அனைவரும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்பதே ஆரியத்தின் வரையறுப்பு! பேரரசன் இராஜராஜன், இராஜேந்திரசோழன் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரையறுப்பில் சூத்திர அரசர்களே! தமிழ்நாட்டு வணிகர்கள், நிலவுடைமையாளர்கள் அனைவரையும் சூத்திரர்கள் என்றே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் குறிப்பிட்டார்கள்! இந்த சூத்திரர்களுக்கு எதிராகத் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள். 

மனுதர்மத்தில், மனு வரையறுத்த நால் வருணம் நான்கும் ஆரிய வர்ணங்களே! பிராமண - சத்திரிய - வைசியர்களுக்கிடையே கலப்பு மணம் செய்து கொண்டு, ஆரிய ஆச்சார
அனுட்டானங்களைக் கடைபிடிக்காமல் சீரழிந்தவர்கள் சூத்திரர்கள் என்றார் மனு” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“அனைவர்க்கும் வாக்குரிமை, அனைவர்க்கும் சொத்துரிமை போன்றவை ஆரிய பிராமண - வைசிய மேலாதிக்கத்திற்குத் தடங்கல்களாக இருக்கின்றன. 

இவ்விரு தடங்கல்களைக் களைய - இந்துத்துவா - இந்தியத்தேசியம் என்ற இரு புனைவுகளை ஆரியம் உருவாக்கியது. இந்துத்துவா அடிப்படையிலான இந்தியத்தேசியம் செல்வாக்குப் பெற்றால், இயல்பாக ஆரிய பிராமண - ஆரிய வைசிய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் உளவியலை அனைத்திந்திய அளவில் க்களிடம் வரவழைத்துவிடலாம் என்பது ஆரியத்தின் தந்திரம். 

பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டக் காலத்திலேயே - காங்கிரசுக் கட்சி - என்ற அரசியல் இயக்கம் தொடங்கிய காலத்திலேயே ஆரியம் தனது ஆதிக்கத்திற்கேற்ப விடுதலை இயக்கத்தை வடிவமைத்தது.

பிரித்தானியப் பீரங்கிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு “இந்தியா” என்று ஆங்கிலேயர் பெயர் கொடுத்தனர். அதே கட்டமைப்பிற்கு ஆரியர்கள் “பாரதம்” என்று புதிய பெயரை சூட்டிக் கொண்டனர். பிராமண ஆதிக்கத்தை முன்னிறுத்தும் வேத - உபநிடதப் பழம்பெருமைகளைப் பேசிக் கொண்டு, சமற்கிருத மேன்மை - இந்தியாவின் “பொதுமொழி” இந்தி என்ற திட்டங்களை முன்வைத்து இந்திய விடுதலை இயக்கத்தைப் புனைந்து கொண்டனர்.
 
“பாரதமாதா பசனை” இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முழக்கமானது. இளம் பருவத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரனாகச் செயல்பட்டு, சிறைப்பட்டபின் வெள்ளை ஏகாதிபத்திய தாசனாகி, மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்து சிறையிலிருந்து விடுதலையான சாவர்க்கர் 1923 -இல் வீட்டில் இருந்து கொண்டு, “இந்துத்துவா” கோட்பாட்டை உருவாக்கினார்.” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினரின் புதிய வர்ணாசிரம - ஆரிய பிராமண - ஆரிய வைசிய வேட்டைக்கு எதிராக பஞ்சாப் தொடங்கி வடநாட்டிலேயே மாபெரும் மக்கள் எழுச்சி கிளம்பியதுதான் மோகன் பகவத் - மோடி குழுவினர்க்குப் பேரிடி விழுந்ததுபோல் இருக்கிறது. 

பஞ்சாப் உழவர்களை உசுப்பிவிட்டது - அவர்களது வீரமரபுமிக்க - சீக்கிய இனம் குறித்த பெருமித உளவியலே! தன்மான உணர்வே! உலகம் முழுவதும் சீக்கியர்கள் போராடுகிறார்கள். 

மூன்று வேளாண் சட்டங்களும் தமிழினத்தை அழிக்க, தமிழ் மொழியை சிதைக்க - தமிழர்களை அடிமைகள் ஆக்க வந்தவை. 

உண்மையை உள்ளது உள்ளபடி உணர்ந்து போராடுவோம்! பேரரசுகள் கொண்டு ஆண்ட இனம் தமிழினம்! வீர வரலாறு படைத்தவர்கள் தமிழர்கள்! மூன்று சட்டங்களையும் முறியடிப்போம்; நம் வேளாண்மை காப்போம்; இனம் காப்போம்; மொழி காப்போம்; தாயகம் காப்போம்!” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  மணியரசன், வலியுறுத்தி உள்ளார்.