சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். டத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். 

தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து அவரே இசை அமைத்துள்ளார். இந்த படத்தை வெளியிட தடை கோரி அபிராமி மால் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், மாமனிதன் திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும், விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்காததால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. 

இந்த தடையை நீக்கக் கோரி, யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு நேற்று வந்தது. ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மால் நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஏற்கனவே, எங்களுடன் ஒப்பந்தம் செய்தது வான்சன் மூவிஸ் நிறுவனம்தான்.

எனவே, ஒப்பந்தப்படி அந்த நிறுவனம் பணத்தை தராததால் ஒப்பந்தம் முடிக்கப்பட்டுவிட்டது. எனவே, படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்கள் செல்வன் ரசிகர்கள்.