கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கு கணவனால் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கொரோனா என்னும் பெருந் தொற்று காரணமாக, உலகமே முடங்கிப் போய் உள்ள இந்த இக்கட்டான சூழலில், உலக அளவில் அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா. வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

முக்கியமாக, கொரோனா தொற்று ஊரடங்கால் சுகாதாரத்தைக் காக்கும் போராட்டங்களுக்கு மத்தியில், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் ஓரங்கட்டப்பட்டு, பாலின அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக”  ஐ.நா கூறி இருந்தது. 

குறிப்பாக, “கொரோனா ஊரடங்கில் UNFPA research கூறியுள்ள அறிக்கையின் படி, இந்தியா போன்ற சில நாடுகளுக்கு பெரும் கவலை அளிக்கும் விசயங்களே நடந்துள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. 

தற்போது, அந்த கூற்று உண்மையே என்பதை கூறும் விதமாக கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கு கணவனால் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக 
ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, மனைவிகள் மீது கணவன்கள் வன்கொடுமை நிகழ்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற வன்கொடுமைகள் நிகழ்வதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டும் தடுக்க முடியவில்லை என்பது கவலை அளிக்கும் விசயமாகவே உள்ளது. 

அதன் படி, கர்நாடகாவில் கடந்த 2019 - 20 ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், சதவிகித அடிப்படையில் மனைவிகளை கணவன்கள் தாக்கியது தொடர்பான வழக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இதுபோன்ற சம்பவங்கள் 115 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது எண்ணிக்யைானது, கடந்த 2018 - 19 ஆம் ஆண்டை விட, சற்று அதிகம் என்று தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல வாரியம் வெளியிட்டுள்ள 5 வது சுற்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், கணவன்களால் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைக்கு 18 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இது போன்ற சம்பவம் கர்நாடகத்தில் 100 சதவிகிதத்தை தாண்டி உள்ளது. இதில், குறிப்பிடும்படியாக ஆபாசப் படம் பார்க்கும் படியும், பாலியல் துன்புறுத்தல்களும் கணவன்களால் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது என்ற விசயமும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

கர்நாடகத்தில் 18 வயது முதல் 49 வயது வரையிலான பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்வது 44.4 சதவிகிதமாக தற்போது உள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பல்வேறு வகைகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் 18 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்றும், கர்நாடகத்தில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதன் எண்ணிக்கை கடந்த 2019 - 20 ஆம் ஆண்டில் அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவை விட மராட்டியத்தில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது என்றும், அந்த அறிக்கையில் 
சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.  

இதனிடையே, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வகை செய்யும் சக்தி மசோதா மராட்டிய சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவை இன்று நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.