2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் சார்லி. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கிய திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுவது என முடிவானது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியாகவிருந்த மாறா திரைப்படம் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 8-ம் தேதி மாறா வெளியாகும் என்று அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து மாறா படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர். 

மாறா திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் துவங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த மாதம் மாறா படத்திற்கான டப்பிங் பணியையும் நிறைவு செய்தனர் படக்குழுவினர். இதனையடுத்து மாறா படத்தின் டீஸர் அல்லது ட்ரைலரை விரைவில் எதிர்பார்க்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.