இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்டதாக கூறப்படும் “புல்லி பாய் ஆப்” அதிரடியாக தற்போது முடக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக புள்ளி விபரங்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.

இந்த சூழலில் தான், இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை வைத்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாக ஒரு குற்றம்சாட்டும் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக, இஸ்லாமிய இளம் பெண்களை அவதூறு செய்யும் வகையில், அவர்களது புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே இணையத்தில் பதிவிடும் விசேஷ ஆப்கள் தான் இந்த “புல்லிபாய்”, “சல்லிடீல்ஸ்” போன்றவைகள் ஆகும்.

இப்படியாக, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்து இந்த சட்டவிரோத தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, “சுல்லி டீல்ஸ்” என்கிற செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் போட்டோக்கள் வெளியிடப்பட்டு, “இஸ்லாமிய பெண்கள் விற்பனைக்கு” என்று, ஒரு செய்தி தொடர்ந்து பரவி வந்தது.

அத்துடன், இதில் பயன்படுத்தப்பட்டு இருந்த புகைப்படங்கள் சம்மந்தப்பட்ட பெண்களின் டிவிட்டர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. 

இது தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆப் அப்போதே அதிரடியாக முடக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, தற்போது “புல்லி பாய்” என்ற, இன்னொரு ஆப், இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி இணையத்தில் அவர்களுக்கு விலை பேசப்படுவதாக தற்போது மீண்டும் புகார்கள் எழுந்துள்ளன. 

குறிப்பாக, இந்த ஆப் செயலியானது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும், இதில் சில பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு “டீல் ஆஃப்தி டே”  என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சியும் இடம் பெற்று உள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த ஆப்பை தற்போது போலீசார் முடக்கி உள்ளனர். 

இந்த பிரச்சனையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சம்பந்தப்பட்ட ஆப்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.