கொரோனாவுக்கு எதிராக 15-18 வயது சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 6.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

vaccine

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அதனைத்தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் இன்று தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியது. இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் இதே போன்று மற்ற பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  இன்று நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.  இதற்காக பதிவு செய்வது புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. இதில் நேற்று இரவு 8 மணி வரை 6.35 லட்சம் பேர் கோவின் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் 15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தனியாக மையங்களை அமைக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார். மாவட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.