மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்.எச்.370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது என்பதற்கு விசாரணக்குழுவின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக, இதுவும் பார்க்கப்படுகிறது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலேசிய விமான விபத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்.இ ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நவம்பர் 2018 ம் ஆண்டு, தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மலேசிய விமான நிலையத்தில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும், விமானத்துறையில் மிகப்பெரிய மர்மமாகக் கருதப்படும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அப்படியொரு ஆய்வாக, அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் இயானெல்லோ (Victor Ianello) மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில், மாயமான விமானம் தென் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 2,070 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்திருக்கலாம் என்பது  தற்போது தெரியவந்துள்ளது.

அந்தப் பகுதியில் 100 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் தேடினால் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக விக்டர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் மாயமான மலேசிய விமானம் குறித்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவிற்கு சொந்தமான இந்த விமானம் மாயமாகி 6 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பதை இன்று வரை யாராலும் உறுதியாக கூற முடியாமல் இருப்பது வேதனை.

இந்த விமானத்தை கண்டறியும் பணியில், மலேசியாவிற்கு உதவியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளும் களத்தில் இறங்கின. ஆனால் குறிப்பிடப்படும்படியாக எந்த தடயமும் சிக்கவில்லை. இதற்கு முன்பு, இந்திய பெருங்கடலில் சுமார் 1,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு (46 ஆயிரம் சதுர மைல்) தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவை தோல்வியில்தான் முடிந்தன.

இறுதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்றுமட்டும், கடந்த 2018ம் ஆண்டு, தனியாக தேடுதல் பணிகளை தொடங்கியது. இந்த தேடுதல் வேட்டையானது சில மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் அதுவும் வெற்றி பெறவில்லை.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் (Tony Abbott), கடந்த மார்ச் மாதம் பேசும்போது, ``இந்த முழு விமான விபத்தும், பைலட்டால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதி" என்கிற ரீதியில் டோனி அபோட் தெரிவித்துள்ள கருத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அவர் கூறும்போது, ``தற்கொலை செய்யும் எண்ணத்துடன் விமானத்தை அதன் பைலட் வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்து விட்டார் என மலேசியாவின் முக்கிய உயரதிகாரிகள் நம்புகின்றனர். மலேசிய அரசின் உயர் மட்டத்தில் இருந்து எனது தெளிவான புரிதல் என்னவென்றால், இந்த விபத்து நடைபெற்றதில் இருந்தே இது பைலட்டால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட சதி என அவர்கள் நினைத்தார்கள்'' என்றார்.

இந்த கூட்டு தற்கொலை முயற்சி (Mass Murder Suicide) என டோனி அபோட் தெரிவித்திருப்பது பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது. விமானம் விபத்தில் சிக்கிய சமயத்தில், மூத்த பைலட்டான ஸகாரி அகமது ஷா என்பவர்தான் பணியில் இருந்தார். அவர் மீதுதான் தற்போது இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என பைலட் ஸகாரி அகமது ஷாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்தர். அதே போன்று மலேசியாவின் சிவில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அமைப்பின் முன்னாள் தலைவரான அஸாருதின் அப்துல் ரஹ்மானும் கூட, டோனி அபோட்டின் கருத்துக்களை விமர்சித்துள்ளார்.

டோனி அபோட்டின் கருத்துக்களை ஆதரிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அஸாருதின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை நீங்கள் முன்வைப்பதால், அந்த பைலட்டின் குடும்பத்தினர் மோசமாக உணர்வார்கள்'' என்றார்.

விபத்துக்கு பின் பல சர்ச்சைகள் இப்படி நீண்டு வந்தாலும்கூட, தற்போதைக்கு விமானத்தை கண்டறியும் பணியே முதன்மையாக பார்க்கவும், செய்யவும்படுகிறது. விரைவில் விமானம் கண்டறியப்படும் என நாமும் நம்புவோமாக!