கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக கொலை செய்து, ப்ரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளான்.

உலகில் வேறு எங்கும் இல்லை, அமெரிக்காவில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயதான செலினா என்ற இளம் பெண்ணிற்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.

இதனையடுத்து, செலினாவிற்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தனர். தனது இரண்டு குழந்தைகளையும் அவர் நன்றாக வளர்த்து வந்த நிலையில், அவர் தற்போது 3 வது குழந்தைக்குத் தாயாகும் வகையில் தற்போது கரு உற்று இருந்தார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென்று மாயமானார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த செலினாவின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், பல இடங்களில் செலினாவை தேடிப் பார்த்து உள்ளனர். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பல இடங்களிலும் தேடிப் பார்த்து செலினாவை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் செலினாவின் கணவர் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் படி, செலினாவின் முன்னாள் காதலன் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அதன் பேரில், செலினாவின் முன்னாள் காதலன் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, முன்னாள் காதலன் வீட்டில் இருந்த பிரிட்ஜில், செலினாவின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், செலினாவின் முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸை தேடிக் கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவரை அமெரிக்க போலீசார் சிறையில் அடைத்தனர். ஆனால், செலினாவின் கொலைக்கான காரணத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. 

இதனிடையே, கர்ப்பிணிப் பெண்ணை முன்னாள் காதலன் கொடூரமாகக் கொலை செய்து, தன் வீட்டின் ப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம், அமெரிக்காவில் கடும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 11 மாணவர்கள் உள்பட 15 மாணவர்களை, அமெரிக்க அரசு கைது செய்துள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும், அமெரிக்க குடியேற்றச் சட்டத்திற்கு எதிராக தங்கியிருந்ததாகவும், இல்லாத ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகப் போலியான ஆவணங்களைத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் பயில விரும்பும் மாணவர்கள் அவர்களது துறையில் ஒரு வருடம் பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. மேலும், அந்நாட்டிலேயே தங்க விரும்புவோர் விருப்ப நடைமுறை பயிற்சியின் கீழ் 24 மாதங்கள் வரை தங்கலாம் என்றும், விதிமுறைகள் உள்ளன. இது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.