ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகக் காலம் காலமாகப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதற்கென்று தனியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடந்த 2017 ஆம் ஆண்டு  வெளியிடப்படப்பட்டு, அது முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பல கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்குத் தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. 

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் தமிழக அரசு அப்போதே சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தது. 

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றும், தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதில், அதிகபட்சமாக 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது என்றும், பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கூறப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என்று, சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம் என்றும், வலியுறுத்தப்பட்டு இருந்தது. அதாவது, மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்றும், அதில் கூறப்பட்டு இருந்தது. 

அத்துடன், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் 
கட்டாயமாக்கப்படுகிறது என்றும், குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி,

- ஜல்லிக்கட்டு காளைகளுயுடன் எப்போதும் 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில், இந்த ஆண்டு  ஜல்லிக்கட்டு காளைகளுயுடன் காளை உரிமையாளர், அவருடன் ஒரே ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- ஜல்லிக்கட்டு காளைகளுயுடன் வரும் இருவருமே, தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்று பெற்று வர வேண்டும். 

- காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

- அப்படி, அடையாள அட்டை பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வாளகத்திற்கு உள்ளே வர அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. 

- அதே போல், அடையாள அட்டை இல்லாத மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- அத்துடன், அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத்துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்துத்துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.