கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த பெண் மருத்துவரான தாய், தனது 8 வயது பெண் குழந்தையை குப்பை கிடங்கில் விட்டுச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அடுத்து உள்ள தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கானது, அங்குள்ள புளியம்பட்டி சாலையில் இருக்கிறது. இந்த குப்பை கிடங்கிற்குச் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் குப்பை கிடங்கு வழியாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சென்றனர்.

அப்போது, அடையாளம் தெரியாத 8 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருவர் மயக்க நிலையில் அங்கு கிடப்பதைக் கண்டு கடும் அச்சியடைந்த அப்பகுதி மக்கள், சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக  அந்த சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது, அந்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இது குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், “அப்பகுதியில் கோயில் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில், ஒரு பெண், இந்தச் சிறுமியோடு தான் கொண்டு வந்த பைகளை அப்பகுதியில் போட்டு விட்டு, அங்கேயே சிறுது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது.

மேலும், அந்த பெண் வீசிச்சென்ற பையில் ஒரு கடையின் ரசீது இருந்தது என்றும், அதனைக் கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதன் படி, அந்த பெண் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

அதே நேரத்தில், நேற்று இரவு தண்டுக்காரன்பாளையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு பெண் உலாவிக்கொண்டு இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள்,  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் தான், தனது 8 வயது பெண் குழந்தையை உயிருக்கு ஆபத்தான நிலையில் குப்பைக் கிடங்கில் போட்டு விட்டுச்சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “அந்த பெண், கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள தியாகதேனாஹல்லி பகுதியை சேர்ந்த 39 வயதான சைலஜாகுமாரி” என்பது, தெரிய வந்தது. அத்துடன், அவர் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் என்பதும் தெரிய வந்தது.

இந்த பெண் மருத்துவருக்கும், இவரது கணவரான என்ஜினீயரான 42 வயதான தர்மபிரசாத்துக்கும் இடையே மன வருத்தம் இருந்து வருவதும் தெரிய வந்தது. 

இதனால், இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து வழக்கு கடந்த 5 வருடமாக நடந்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், பெங்களூரூவில் தனது வயதான தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த சைலஜாகுமாரி, அதே பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். 

தற்போது, கொரோனா ஊரடங்கால் மருத்துவ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் வருமானம் இல்லாமல் பண நெருக்கடியில் சைலஜாகுமாரி சிக்கி தவித்து வந்துள்ளார் என்றும், இதனால் மன முடைந்த சைலஜாகுமாரி மருத்துவத் துறையில் வேலை தேடி தனது மகளுடன் வெளியூருக்கு செல்ல முடிவு எடுத்திருக்கிறார். 

இதற்காக, பெங்களூரூவிலிருந்து கடந்த 24 ஆம் தேதி இரவு பேருந்தில் ஏறி மைசூரு வந்துள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து சத்தியமங்கலம் வழியாகத் திருப்பூருக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது, பேருந்து பயணம் ஒத்துக்கொள்ளாமல், தனது மகள் வாந்தி எடுத்ததால் தண்டுக்காரன்பாளையத்தில் அந்த பெண் மருத்துவர் சைலஜாகுமாரி இறங்கி உள்ளார்.

இதனையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த சைலஜாகுமாரி, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து, தனது மகளுக்கு தான் கையில் வைத்திருந்த சளிக்கு கொடுக்கும் டானிக் மருந்தை ஒரு பாட்டில் முழுவதையும் குடிக்க வைத்து உள்ளார். இதில், அந்த சிறுமி மயக்கமடையவே, தனது மகளை அந்த பகுதியிலிருந்த ஊராட்சி குப்பை பிரிக்கும் கொட்டகை முன்பு படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். 

மேலும், கையிலிருந்த எலிமருந்தையும் சைலஜாகுமாரி சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். தொடர்ந்து எங்கு செல்வது என தெரியாமல், தண்டுக்காரன்பாளையம் பகுதியிலேயே சுற்றி வந்து இருக்கிறார். 

இந்த நிலையில் தான், அப்பகுதி மக்களின் புகாரால் சைலஜாகுமாரஜயை சேவூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அந்த பெண் மருத்துவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.