திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், கடந்த 2 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. 

Lalithaa Jewellery robbery

இது தொடர்பாக, 7 தனிப்படைகள் வரை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வந்த நிலையில், கடந்த வாரம், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் வாகன சோதனையில், போலீசார் மணிகண்டனைத் துரத்திப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, பிரபல வங்கி கொள்ளையன் முருகன் தலைமையிலான கும்பலே, இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில், இன்று காலை முருகனை அவனது திருவெறும்பூர் வீட்டிற்கு அழைத்து வந்த  கர்நாடக போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றனர். 

இந்த தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து, பின்னாடியே துரத்திச் சென்ற தமிழக போலீசார், கர்நாடக போலீசாரிடமிருந்து 11 கிலோ தங்க நகைகளை மீட்டு வந்தனர். பின்னர், அவற்றை ஆய்வு செய்ததில், அந்த நகைகள் அனைத்தும் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Lalithaa Jewellery robbery

இதனிடையே, முருகனிடமிருந்து கர்நாடக போலீசார் பறிமுதல் செய்த நகைகளை, பெங்களூர் கொள்ளை வழக்கில் மீட்கப்பட்ட நகையாகக் கணக்குக் காட்ட, கர்நாடக போலீசார் திட்டமிட்டதாகவும், அதனைத் தமிழக போலீசார் முறியடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.