சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, முதலமைச்சராகவும் முடிசூட நினைத்த நேரத்தில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா, கடந்த மாத இறுதியில் விடுதலை ஆனார். இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பூரண குணமடைந்த நிலையில் பெங்களூரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஒருவாரமாக ஓய்வெடுத்தார். 

பின்னர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டார். வழிநெடுகிலும் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக எல்லையில் சசிகலா நுழைந்த போது, அதிமுக கொடியை அவரது காரில் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் நோட்டீஸ் அளித்தனர்.

இதையடுத்து அதிமுக பிரமுகர் ஒருவரின் காரில் ஏறி சசிகலா பயணித்தார். அதில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் அதிமுகவில் தனக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. சிறைக்கு செல்வதற்கு முன்பிருந்த அதே அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான் நான் என்று அனைவருக்கும் செயலில் காட்டினார. 

வரும் வழியில் ஆதரவாளர்களை பார்த்து பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டேன் என்று அதிரடியாக பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அவரால் பதவி பெற்றவர்கள் இனி தான் ஆட்டம் காணப் போகிறார்கள் என்று பலரும் கூறுகின்றனர். 

ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சசிகலாவிற்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இதன்மூலம் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்த அவர், நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார்.

நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி தமிழக அரசு அடுத்த சில நாட்களுக்கு அதை மூடியது. இந்த இடத்தில்தான் சசிகலாவின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. சசிகலா நேராக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்றார். எம்.ஜி.ஆர். தான் அதிமுக வின் ஊன்றுகோல். கட்சியை நிறுவியதும் கட்டமைததும் அவரே. எனவே சசிகலா வின் எம்.ஜி.ஆர். இல்ல வருகை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அங்கு அவருக்கு ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களால் ஆன மாலையை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதையடுத்து தியாகராய நகர் உட்பட பல்வேறு இடங்களிலும் சசிகலாவுக்கு பலத்த வரவேற்பை கொடுத்தனர் மக்கள். drone மூலம் பலூன்களை பறக்க வைத்து வரவேற்பு அளித்தது, மேளதாள வரவேற்பு என்று கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்கு இணையான வரவேற்பை பெற்றார் சசிகலா. 

இந்நிலையில் சசிகலாவின் வருகை என்ன மாதிரியான அரசியல் மாற்றங்களை உருவாகக்கும், யாருக்கு சாதகமாக அமையும், யாருக்கு பாதகமாக அமையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சசிகலா அதிமுக-வை கைப்பற்ற முயற்சித்தால், உட்கட்சி பூசல் உருவாகி அது திமுக வுக்கு சாதகமாக அமையலாம். ஒரு வேளை சசிகலா அதிமுக வுடன் இணக்கமாகி, கட்சியில் இணைந்தால் அது அதிமுக வுக்கு வலு சேர்க்கும் என்றும் திமுக வுக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நேற்று சசிகலா பேசுகையில், "அதிமுகவின் பொது எதிரி ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க, ஒரே அணியாக செயல்படுவோம்"; "எம்ஜிஆர், ஜெயல‌லிதா வழியில் ஒரே அணியாக செயல்படுவோம்" என்று கூறினார்.

அதிமுக-வினர் செயல்பாடுகள், சசிகலாவின் இனக்காமான பேச்சு ஆகியவற்றை வைத்து பார்க்கையில், சசிகலா அதிமுக வில் இணைவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிகிறது. பல்வேறு அதிமுக நிர்வாகிகள் சசிகலா பற்றி பேசியபோதும், முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இது வரை சசிகலா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படியாக சூழலில் கட்சித் தலைமையின் மௌனமும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற இச்சூழலில் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்