தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்புக்கு அமமுக தயாரான நிலையில், தமிழக காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது அதிமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் புறப்படும் நிலையில், அதிமுக கொடி பொருத்தப்பட்ட தனது காரிலேயே அவர் சென்னைக்கு வந்துகொண்டு இருக்கிறார். ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது அதிமுக கொடி பொருத்திய ஜெயலலிதாவின் காரில் சசிகலா பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று, தமிழக டிஜிபி அலுவலகத்தில் 2 முறை அமைச்சர்கள் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில், “சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சசிகலாவும், டிடிவி தினகரனும் முயல்வதாக” அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், சசிகலாவின் வருகையைக் கண்டு அதிமுக அமைச்சர்கள் அஞ்சுவதாக விமர்சித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சட்டம் ஒழுங்கு 
பிரச்னையை ஏற்படுத்த அதிமுகவினர் திட்டமிடுவதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
 
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடத்தில் இது வரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், சசிகலாவுக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை 5 மண்டலங்களாகப் பிரித்து வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் குவிவார்கள் என்றும் அமமுக கூறியது. 

இது ஒரு புறம் இருந்தாலும், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுகிறது” என்று, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் காவல் துறை
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

முன்னதாக, “பொது அமைதியைப் பாதிக்கும் வகையில், செயல்படும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என், தமிழக காவல் துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, பெங்களூரு ரிசார்டின் வாசலில் சசிகலா புறப்படும் போது, அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்து “சின்னம்மா வாழ்க, அதிமுகவின் 
வாழ்நாள் பொதுச் செயலாளர் சசிகலா” என்ற முழக்கங்களை எழுப்பினர். இதே முழக்கங்கள் பெங்களூரு சாலைகளில் தற்போது எதிரொலித்து வருகிறது.

அத்துடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சிலர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ள 
உள்ளது.

அதே போல், சசிகலா தமிழ் நாட்டிற்கு வருகை தருவதை முன்னிட்டு, விதி மீறல்கள் தடுத்தல் தொடர்பான செயல்முறை ஆணைகளை கடைப்பிடிக்க
வேண்டும் என்று, கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் செயல்முறை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

அந்த செயல்முறை நடவடிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால், 

“தற்போது உள்ள கோவிட் 19, சட்டம் ஒழுங்கு நிலையைக் கருத்தில் கொண்டு 30(2) காவல் சட்டம் அமுலில் உள்ளது என்றும், இதனால் கீழ்க்கண்டுள்ள செயல் முறைகளைப் பின்பற்ற இந்தச் செயல் முறை ஆணையின்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன் படி, 

- சசிகலா வாகனத்தின் பின்பு 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வரவேண்டும்.

- அமமுக கட்சியினரின் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை.

- சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்தினால், அது விதி மீறல்கள் ஆகும்.

- ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்திக் கூட்டத்தை ஒழுங்குபடுத்திட வேண்டும்.

- பட்டாசு வெடிப்பதற்கும் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை. 

- கொடி தோரணங்கள் பேனர்கள் மற்றும் பிளெக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது.

- விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், சசிகலாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறை மூட்டுக்கோட்டைப் போட்டுள்ளது என்றே அரசியல் கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.