சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டு வருகிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகள் தண்டனை பெற்று, சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையானார்.  

அப்போது, கொரோனா பாதிப்பு காரணமாக, சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாகக் குணமடைந்த நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி, அவர் மருத்துவமனையில் இருந்து இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்கள் கூறியதால், பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்து வந்தார். 

இந்த நிலையில் தான், பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில், சசிகலா தற்போது சென்னை புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார். 

சசிகலா பெங்களூரு ரிசார்ட்டில் இருந்து இன்று காலை 7.20 மணி அளவில், சென்னைக்கு புறப்பட உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், 7.30 மணிக்கு காரில் அவர் சென்னைக்குப் புறப்பட்டார் என்று கூறப்படுகிறது.  

சசிகலா, தமிழகத்திற்கு புறப்படுவதற்கு முன், ஜெயலலிதா படத்தை சசிகலா வணங்கினார். அதன் பிறகே சசிகலா, அங்கிருந்து சென்னை புறப்பட்டார். 

அப்போது, பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவிற்கு, அவரது தொண்டர்கள் ஆரத்தி எடுத்தனர்.

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் கொண்டுவரப்பட்டு உள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று சென்னை திரும்பவுள்ள நிலையில், தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டு உள்ளது. 

அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா, தனது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட நிலையில், அவர் சென்னைக்கு வந்துகொண்டு இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது, சசிகலா தனது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையானது.

மேலும், சென்னை திரும்பும் சசிகலா, போரூர் வழியாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு வருகிறார் என்றும், அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்துகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்துக்கு சசிகலா வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வழி நெடுக திரண்டு வந்து, சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதனால், சசிகலா தனது காரில் இருந்தபடியே கட்சியினரின் உற்சாக வரவேற்பை சசிகலா ஏற்றுக்கொள்கிறார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.