கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர். நடிகர்கள் சரத்குமார், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, ஜெனிலியா, நிக்கி கல்ராணி, ராஜமவுலி, பிருத்விராஜ், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா, ராம் சரண் தேஜா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ட்விட்டரில் GetWellSoonSURIYAanna என்ற ஹேஷ்டேக் நேற்று இரவில் இருந்து டிரெண்டாகி வருகிறது. இந்த கொரோனாவில் இருந்து சூர்யா விரைவில் குணமடைவார் என்றும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருவதாகவும் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கில் தெரிவித்து வருகின்றனர்.

சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யா 40 என அழைத்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

சூர்யா 40 படத்தின் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. சூர்யாவுக்கு நாயகியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.