கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகியது. 

அவர் பேசியது, ‘’ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருக்கும். பிள்ளையைத் தூக்கி இடுப்பில் வச்சா உட்கார்ந்து கொள்ளும். வெளிநாடு மாடு ஒரு மணி நேரத்தில் 40 லிட்டர் பால் கறக்கும், ஆனால் அதைக் குடிச்சோம்னா பெரிசா ஊதிப்போக வேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்று பேரல் மாதிரி ஆகிவிட்டது. தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால் நம்ம நாட்டு மாடு பால்தான்.” என்று பேசினார். 

லியோனி இப்படி பேசியதைக் கையில் எடுத்த பாஜக தரப்பு திமுகவுக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் காயத்ரி ரகுராம் தன் ட்விட்டரில், ‘இத்தகைய ஆணாதிக்க மனோபாவ நபர்கள் குறித்து கனிமொழி என்ன கூற விரும்புகிறார்? இதுதான் உங்கள் கட்சி பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா?” என்றுள்ளார். 

இதுகுறித்து கனிமொழி, “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தித் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்” என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.