“நீ பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும்” என்று, மனைவியை வற்புறுத்திய கணவனுக்கு, அவரது அம்மா - அப்பா உடந்தையாக இருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்த 38 வயதான கல்பனா, சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் வசித்து வந்தார்.

அதற்கு முன்பாக, அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனாவுக்கு 28 வயது இருக்கும் போது, மணிகண்டன் என்ற இளைஞருடன் கல்பனாவுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், இந்த தம்பதிக்கு  இரு மகள்கள் பிறந்தனர்.

இதனையடுத்து, மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கி உள்ளது. மனைவி கல்பனா - கணவன் மணிகண்டன் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்துகொண்டே இருந்து உள்ளது. 

அந்த நேரத்தில், அதாவது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கல்பனா சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் தங்கி, குறிப்பிட்ட தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, பேஸ்புக் மூலமாக சென்னை ஆவடி அண்ணாநகரைச் சேர்ந்த 35 வயதான பிரசன்ன வெங்கடேஷ் என்ற இளைஞர், கல்பனாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

இந்த பிரசன்ன வெங்கடேஷ், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார். இப்படியான நிலையில், கல்பனா -  பிரசன்ன வெங்கடேஷ் இருவரின் ஃபேஸ்புக் பழக்கம், தொடக்கத்தில் நட்பாக சென்று உள்ளது. அதன் தொடர்ச்சியாக, இவர்களுக்குள் அது காதலாக மாறி உள்ளது. இதனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன் படி, இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் சென்ற பிறகு, காதல் கணவன் பிரசன்ன வெங்கடேஷ் “இவர்கள்தான் என்னுடைய பெற்றோர்கள்” என்று, இருவரை அறிமுகம் செய்திருக்கிறார்.

இந்த அறிமுகத்திற்குப் பிறகு, மாமனார் - மாமியாரோடு கல்பனா, ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இப்படியான நிலையில், திடீரென்று ஒருநாள் பிரசன்ன வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர், கல்பனாவிடம் வந்து. “நம் வீட்டிற்கு வேறொரு ஆண் ஒருவர் வருவார், அவருடன் நீ உன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று, கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கல்பனா, “என் கணவன் வரட்டும், உங்களை எல்லாம் சொல்லி மாட்டிவிடுகிறேன்” என்று, அவர்களை எச்சரித்து இருக்கிறார்.

அதன்படியே, வேலைக்கு சென்ற கணவன் பிரசன்ன வெங்கடேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, “மாமானார் - மாமியார் கூறிய படுக்கையைப் பங்கு போடும் விசயம்” குறித்து கூறி உள்ளார். 

மனைவி கல்பனா கூறியதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட கணவன் பிரசன்ன வெங்கடேஷ், “என் பெற்றோர் அவர்கள் சொன்னதில் என்ன தவறு? நீ பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும்” என்று, கூறி வற்புறுத்தி இருக்கிறான் கணவன்.  

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த கல்பனா, தான் ஏமாற்றப்பட்டதை நன்கு உணர்ந்து உள்ளார்.

அத்துடன், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கல்பனாவை, அவரது கணவன் பிரசன்ன வெங்கடேஷ், அடித்து உதைத்து கடுமையாக மிரட்டி உள்ளான்.

கொடுமையின் உச்சமாக, “நீ பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்தால், நாம் இருவரும் உல்லாசமாகத் தனிமையில் இருந்ததை, நான் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என்றும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்றும், மிரட்டி இருக்கிறார்.

இதனை கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த கல்பனாவை, அடித்துத் துன்புறுத்தி அவரிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் வங்கிக்கணக்கிலிருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து வந்த கல்பனா, கணவன் வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் நிறுவனத்திற்குச் சென்று விசாரித்து உள்ளார். அப்போது, கணவன் பிரசன்ன வெங்கடேஷ்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்றும், அந்த பெண்ணும் இதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த கல்பனா, அவரைப் பற்றித் தொடர்ந்து விசாரித்திருக்கிறார். அப்போது, பிரசன்ன வெங்கடேஷ் இது போன்று பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, தொடர்ந்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் கல்பனா புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரசன்ன வெங்கடேஸ், அவரது தந்தை ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.