துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய பாஜக பெண் பிரமுகரால், மற்ற கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் பீதியடைந்து 
கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வடமாநிலங்களைப் போல் நடைபெற்ற இந்த சம்பவம், இந்த முறை தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் தான் அரங்கேறி இருக்கிறது.

கோவையைச் சேர்ந்தவர் பிரதீப் ஜெகதீசன், இவரது மனைவி சௌமியா ஆகியோர் பாஜக பிரமுகர்களாக அந்த பகுதியில் அறியப்பட்டு வருகின்றனர். 

முக்கியமாக, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் தீவிர ஆதரவாளரான இந்த சௌமியா, துப்பாக்கியுடன் தனது கணவர் பக்கத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார்.

அதாவது, தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்தப் பெண் சௌமியா, துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக துப்பாக்கியுடன் தனது கணவர் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டதை, அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அத்துடன், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் அவர் குறிப்பிட்ட இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு உள்ளார்.

அப்போது, சௌமியா கையில் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருந்த புகைப்படத்தைப் பார்த்த பிற கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், பாகஜ பிரமுகர் சௌமியா கையில் நாட்டு துப்பாக்கியை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர்.

மேலும், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த இணைய வாசிகள் பலரும்,  கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கோவையை சேர்ந்த பலரும், அந்த பகுதியைச் சேர்ந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோவை மாநகர போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக, “இந்த பாஜக பெண் பிரமுகர், துப்பாக்கி உரிமம் வைத்துள்ளாரா? யாரையேனும் மறைமுகமாக மிரட்டும் நோக்கத்தில் இப்படி சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிட்டாரா?” உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பல ரவுடிகள், பட்டா கத்தியுடன் கேக் வெட்டுவது போன்ற பல போட்டோக்களை, சமூக வலைத்தளங்களில் கடந்த காலங்களில் பதிவிட்ட போது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபர்களை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பாஜக பிரமுகர் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கி உடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியதால், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதே போல், கடந்த ஆண்டு மதுரையில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் கையில் துப்பாக்கியை உயர்த்திக் காட்டியபடி மேடையில் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் கடந்த ஆண்டு பெரும் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.