தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்த நிலையில்  வெற்றிகரமான கதாநாயகனாக  தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள். தூரத்து இடி முழக்கம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகர் விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் மிகுந்த பிரபலமானார். தொடர்ந்து வெளியான வைதேகி காத்திருந்தால், ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கட்டிப் போட்டார். 

விஜயகாந்தின் அதிரடி திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றது. புலன் விசாரணை, மாநகரக்காவல், சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா என காவல்துறை அதிகாரியாக உளவுத்துறை அதிகாரியாக என பல கதாபாத்திரங்களில் அசத்தியிருப்பார். விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் கடைசியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ரமணா. இன்றும் ரமணா திரைப்படத்தில் விஜயகாந்த் பேசும் வசனங்கள் அனைத்தும்  பலராலும் பேசப்படுகின்றன. 

திடீரென மூச்சுத் திணறலால் அவதிப்பட நடிகர் விஜயகாந்த் இரவு 3 மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில்  விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது வழக்கமான மருத்துவ பரிசோதனை காகவே என்று தெரிவித்துள்ளனர்.

திரைத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார்.