கொரோனா முன் களப்பணியாளராகச் செயல்பட்டு வந்த 27 வயது இளம் பெண்ணிடம் முதியவர் ஒருவர் திடீரென்று அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளம் பெண் ஒருவர், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் முன் களப்பணியாளராக தற்போது பணியாற்றி வருகிறார். 

இந்த இளம் பெண், கடந்த 15 ஆம் தேதி அன்று, சென்னை ஏழு கிணறு போர்ச்சுகீசியர் தெருவில் உள்ள வீடுகளில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சதக்கத்துல்லா என்ற முதியவர், “என் வீட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என்று, அந்த இளம் பெண்ணிடம் கூறி, அவரை தனது வீட்டிற்குள்ளே அழைத்து உள்ளார்.

அந்த இளம் பெண், அந்த முதியவரின் வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த முதியவர் தன் வீட்டின் கதவை மூடி, உள் பக்கமாக தாளிட்டு உள்ளார். அந்த பெண் அப்போது சுதாரிப்பதற்குள், அந்த முதியவர் திடீரென்று இளம் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காமல் கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், பயத்தில் சத்தம் போட்டுக் கத்தி உள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த இளம் பெண்ணை, அந்த முதியவரிடம் இருந்து மீட்டு, முதியவரான சதக்கத்துல்லாவைப் பிடித்துத் தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்து நேராக அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்தார்.

கொரோனா முன் களப்பணியாளரான அந்த இளம் பெண் அளித்த புகார் குறித்து துறைமுகம் அனைத்து நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து, அந்த முதியவரை அதிரடியாகக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் தற்போது மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் உட்பட இந்தியா முழுமைக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சில தன்னார்வலர்கள் முன் களப்பணியாளர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் மிகவும் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டிய பொது மக்கள் சிலர், இது போன்று அத்துமீறி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவது சக முன் களப்பணியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தும், ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.