தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், “விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக” தேமுதிக தெரிவித்து உள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு, அதிகாலை நேரத்தில் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு விஜயகாந்த், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

அவருக்கு, அங்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், “வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று, தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், “விஜயகாந்த் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது என்றும், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும், அவர் குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றும், தேமுதிக தரப்பில் விளக்கம் தரப்பட்டு உள்ளது.

இதனிடையே, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். அப்போதே, அவருக்கு உடல் நிலை சீராக இல்லை என்ற தகவலும் பரவியது. 

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த தேமுதிக நிர்வாகிகள், “கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், விஜயகாந்த் தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் வாக்களிக்க வரவில்லை” என்று விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.