தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்திலும் மிக அதிகமாக கொரேனா பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் தமிழகத்தில் 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

இப்படியான அசாதாரமான சூழ்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களோடு, மருத்துவ நிபுணர் குழுவோடும், தலைமைச் செயலாளர் இன்று தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன் படி, தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம், “மறு உத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்” என்றும், கூறப்பட்டு உள்ளது. 

“இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் முழு ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும்” என்றும், தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

எனினும், “மே 2 ஆம் தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றும், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்குக் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வு அளிக்கப்படும்” என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

“தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவு மெட்ரோ ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இவற்றுடன், உணவகங்களில் காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், தமிழகத்தில் மே 1 ஆம் தேதி சனிக் கிழமை அன்றும், முழு ஊரடங்கு என்று தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியான வண்ணகம் இருந்தன.

இந்நிலையில், “தமிழகத்தில் மே 1 ஆம் தேதி சனிக் கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும்” சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், “தமிழகத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த விளக்கத்தை நீதிமன்றத்தில் அளித்து உள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், “தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம்” என்றும், கூறியுள்ளது. 

“வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி” இந்த வழக்கையும் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.