“தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்ஆப் மூலமாக அலகுத் தேர்வு நடத்தப்படும்” என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், இந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, மே 2 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, மறு நாளே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற இருந்ததால், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் பங்கேற்பதன் காரணமாக மே 3 ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்வு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பொதுத் தேர்வை சில நாட்கள் தள்ளி வைக்க பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தியது. 

அதன் படி, “மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த முதலாவது மொழிப்பாடம் தேர்வானது, மே 31 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதி திவிரமாக பரவியதன் காரணமாக, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 

தற்போது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் இது வரை இல்லாத அளவாக புதிய உச்சத்தில் இருப்பதால், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, “12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உறுதியாக தேர்வு நடைபெறும்” 

அத்துடன், “கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைந்தவுடன் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

முக்கியமாக, “தேர்வு ரத்து செய்யப்படவில்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், “தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்ஆப் மூலமாக அலகுத் தேர்வு நடத்தப்படும்” என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அத்துடன், “அலகுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை” அரசு தற்போது வெளியிட்டு உள்ளது. 

அதன் படி, 

- வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும். 

- அந்த குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு எந்த தகவலும் பதிவிடவோ, பரிமாறவோ கூடாது. 

- அந்த குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் முதலியவை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும்.

- ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி, அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்” என்றும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.