சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்துக் குழந்தைகளும், கொரோனா தொற்று இல்லாமல், பாதுகாப்பாக பிறந்திருக்கின்றனர். இது ஆசிய அளவிலான சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் விஜயா பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, ``மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் என மொத்தம் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 60 சதவீதம்சுகப் பிரசவம், 40 சதவீதம் சிசேரியன். 4 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தாய்மார்களும், குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை 1,075 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பிரசவத்திற்கு மிக முக்கியமான மருத்துவமனை.

அவசர சிகிச்சைக்காக மட்டுமே தினசரி ஆயிரக்கணக்கான தாய்மார்கள் வருகிறார்கள். பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறுகையில், ``சென்னை எழும்பூர் மருத்துவமனையில் தினமும் 50 பிரசவம் நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் (27.10.2020) நள்ளிரவு 12 மணி முதல் நேற்று (28.10.2020) நள்ளிரவு 12மணி வரை 24 மணி நேரத்தில் 64 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடத்தி சாதனை செய்துள்ளோம். எந்த சிக்கல்களும் இல்லாமல் நடந்தது. சராசரியாக நாளொன்றுக்கு 50 பேர் வரையிலும், மாதம் ஒன்றுக்கு 1500 பேர் வரையும், ஆண்டுக்கு 18 ஆயிரம் பேர் வரையிலும் இங்கு பிரசவம் நடைபெறுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து தயாராக இருக்கிறாரகள். நடந்த 64 பிரசவங்களில் 34 அறுவை சிகிச்சை முறையிலும், மற்றவை சுகப்பிரசவமாகவும் நடைபெற்றது. தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக நலமுடன் உள்ளார்கள். கொரோனா பாதித்த 4 தாய்மார்களுக்கும் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் குழந்தையை பெற்றுள்ளனர்." இவ்வாறு மருத்துவர் விஜயா கூறினார்.

மூன்று தினங்களுக்கு முன்னர்தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு விழாவொன்றில் பேசும்போது, ``கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16-ல் இருந்து 15 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில், 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம் என்பது ஒரு சரித்திர சாதனையாகும்.

தாய்சேய் நலப் பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 99.9 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியைக் காட்டுகிறது" என்று தமிழகத்தின் சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை, பெருமையுடன் பொதுவெளியில் பகிர்ந்துக்கொண்டார். தற்போது தமிழகத்தின் திறனை நிரூபிக்கும் வகையில், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. எழும்பூர் மருத்துவக் குழுவுக்கு, பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். ஆசியாவில் இதுவரை இத்தனை பிரசவங்களை எந்த ஒரு மருத்துவமனையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.