“டவ் தே புயல் எதிரொலியாக, தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்” என்று, சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றி உள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்படியான நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரு சில இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. 

இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த சூழலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு “டவ் தே” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 

“அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் படி, தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.

அத்துடன், “கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்” வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

முன்னதாக, “இந்த டவ் தே புயல் காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மராட்டியம், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும்” என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

இதனிடையே, தமிழ்நாட்டில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.