ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் 'வலிமை'யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும்.

மே 1-ம் தேதி அஜித்தின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் 'வலிமை' படம் குறித்து போனி கபூர் பாலிவுட் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எங்களைக் கேட்டு வருகின்றனர். நாங்கள் காத்திருந்த காரணம் நாங்கள் தயாராகவில்லை என்பதே. ரசிகர்களைக் காத்திருக்க வைப்பது எங்கள் நோக்கமல்ல. இப்போது பெரும்பாலான வேலைகள் முடிந்துள்ளதால் மே-1ஆம் தேதி முதல் பார்வையை வெளியிடுகிறோம். டப்பிங் உட்பட மற்ற இறுதிக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.

நான் கதையைக் கேட்டவரை, படப்பிடிப்புக்குச் சென்றும், படம்பிடித்த காட்சிகளையும் பார்த்தவரை, கண்டிப்பாக ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஒரு அழுத்தமான குடும்பக் கதையும், அழுத்தமான ஆக்‌ஷனும் இந்தப் படத்தில் இருக்கிறது. அத்தனை அஜித் ரசிகர்களையும் இந்தப் படம் திருப்திப்படுத்தும். ஏன் அத்தனை சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்.

பைக் துரத்தல் காட்சிகளில், சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜித்தே நடித்துள்ளார். 'நேர்கொண்ட பார்வை'யைப் போல இந்தப் படத்தை வட இந்தியாவிலும் வெளியிடுவோம். டப்பிங் செய்வோமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று போனி கபூர் பேசியிருந்தார்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகள் வெளியீட்டு உரிமத்தை பற்றிய முக்கிய தகவளை தமது ட்விட்டர் பக்கத்தில் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். அந்த தகவலின்படி வலிமை திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளதாக போனி கபூர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.