இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் என அழைக்கப்படும் இர்பான் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இர்ஃபான் பதான் பங்கேற்று விளையாடினார். இதில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய லெஜெண்ட்ஸ் அணி. இதில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. 

சிறந்த கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான், நடிப்பிலும் அசத்தி வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் பதான். 

இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீஸரை கொண்டாடினர் சியான் ரசிகர்கள். டீஸர் காட்சிகளில் பல கெட்டப்புகளில் வருகிறார் சியான் விக்ரம். கணித வாத்தியராக இருந்து கொண்டு அவர் செய்யும் குற்றங்களை கண்டு பிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக இருக்கிறார் இர்ஃபான் பதான். 

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இர்ஃபான் பதான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் திரை மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள்.