பொங்கல் விருந்தாக வெளியான ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. படத்தில் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். 

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த டீசரை ஹாலிவுட் படமான டெனென்டின் காப்பி என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த விமர்சனத்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு அவரது ஸ்டைலில் விளக்கமும் அளித்திருந்தார்.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரம்மாண்டமாக செட்டின் அமைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டானது. இப்படத்தின் இறுதி கட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.