கணவரை இழந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த 41 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான கருணாநிதி, தன்னுடைய தாய், கணவனை இழந்த தங்கை, அந்த தங்கையின் 10 வயது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இப்படியான நிலையில், கணவனை இழந்து தனது அண்ணன் உடன் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதான சக்திவேல் என்பவர், அந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வலியுறுத்திப் பல நாட்கள் பின்னாடியே வந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அந்த பெண் கடந்த 30 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து திடீரென்று காணாமல் போய் உள்ளார்.

இதனால், பதறிப்போன அந்த பெண்ணின் அண்ணன், அன்றைய தினமே சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். 

அத்துடன், காணாமல் போன அந்த பெண்ணின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, குறிப்பிட்ட அந்த தேதியில் அதிகாலை நேரத்தில் சம்மந்தப்பட்ட அந்த பெண் நடந்து சென்றுகொண்டு இருந்து உள்ளார். அப்போது, அங்கு வந்த கார், அந்த பெண்ணை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணை கடத்திச் சென்றது, அதே பகுதியில் டீக்கடையில் வேலை பார்க்கும் 41 வயதான சக்திவேல்  என்பது தெரிய வந்தது.

மேலும், இந்த சக்திவேல், அந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி, பல நாள்களாக பின்னாடியே அலைந்து திரிந்ததும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் சக்திவேலை அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது, அவருடன் இருந்த கடத்தப்பட்ட பெண்ணையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “நான் அந்த பெண்ணை விரும்பினேன், ஆனால் அந்த பெண்ணை என்னை விரும்ப வில்லை. ஆனாலும், எப்படியாவது அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன்.

அதனால், எனது நண்பர்கள் உதவியுடன், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி எங்கள் வண்டியில் ஏற்றி வேலூருக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சிவன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டேன்” என்று, தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குறிப்பாக, “தனது இந்த கடத்தலுக்குத் தனது நண்பர்களான ராஜி, கோபி, இனியன் ஆகிய 3 பேர் தான் உதவி செய்தார்கள்” என்றும், அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, மீட்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “சக்திவேல் என்னைக் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக” தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், சக்திவேலுக்கு உதவிய அவருடைய நண்பர்களான ராஜி, கோபி, இனியன் ஆகிய மூவரையும் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து, அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.