திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாடோடிகள் பட நடிகை சாந்தினி அளித்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மணிகண்டனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கு, ஹாட் டாப்பிகாக இருந்து வரும் அது வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, நாடோடிகள் பட நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இது தொடர்பாக நடிகை சாந்தினி அளித்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், என்னை திருமணம் செய்வதாகக் கூறி ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாகக் கணவன் - மனைவியாக வசித்து வந்தோம் என்றும், என்னை கர்ப்பமாக்கி விட்டு, கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டார்” என்றும், பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

குறிப்பாக, “என்னை அந்தரங்கமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை வைத்து என்னை மிரட்டியதாகவும், இது தொடர்பான வாட்ஸ்ஆப் சாட்டிங் ஆதாரங்கள் மற்றும் வீடியோ - ஆடியோ ஆதாரங்களை” சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் சமர்ப்பித்தார்.

அத்துடன், “முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்றும், தன் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வேண்டும்” என்றும், அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

“அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், நடிகை சாந்தினி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது.

ஆனால், அப்போது இந்த குற்றச்சாட்டு விளக்கம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், “ துணை நடிகை சாந்தினி எனக்கு யார் என்றே தெரியாது என்றும், பணம் பறிக்கும் நோக்கில் இவர் இவ்வாறு செயல்படுகிறார்” என்றும், குற்றம்சாட்டி, தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார்.

இந்த புகார் மனு மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது “கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ்” அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். 

இதன் அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கைது நடவடிக்கை பாய உள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீடு தற்போது பூட்டப்பட்டு இருப்பதாகவும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் மீதான “கைது நடவடிக்கைக்குப் பயந்து, முன்னால் அமைச்சர் மணிகண்டன் தற்போது தலைமறைவாக இருக்கிறாரா?” என்ற கேள்வியும், தற்போது எழுந்து உள்ளது.