பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் திடீரென்று தற்கொலை முயன்றதால் பெரும் 
பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரத்தைத் தொடர்ந்து, பிரபல விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனை ஒருவர், தனது பயிற்சியாளர் மீது தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சியாளரான நாகராஜன் என்பவர், சொந்தமாக விளையாட்டு பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். 

இந்த பயிற்சி மையத்தில், தடகள வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்று கனவுகளுடன், அதே சமயம், பொருளாதார வசதிகள் இல்லாத ஏழை மாணவிகள் ஏராளமானோர் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில், மிகவும் ஏழை மாணவிகளாக உள்ளவர்களுக்கு, பயிற்சியாளர் நாகராஜன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அங்கு பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஏழை மாணவிகள் ஏராளமானோர், வேறு ஒரு பயிற்சி மையத்திற்கு மாற முடியாமலும், பாலியல் தொந்தரவை வெளியே வேறு யாரிடமும் கூற முடியாமலும் அங்குத் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பயிற்சியாளர் நாகராஜன், சென்னை ஒய்.எம்.சி.ஏவில் உள்ள தனது வீட்டில் வைத்து 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போது, அந்த பெண் நாகராஜனை கொலை செய்ய முயன்றதும், தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், பயிற்சி முடிந்த பிறகு ஒரு மாணவியை மட்டும் நாகராஜன் கடைசியாக இருக்க சொல்வதாகவும், அதன்படி மற்ற மாணவிகள் சென்ற பிறகு கடைசியாக இருக்கும் மாணவிக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரிடம் பயிற்சிபெறும் பல மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

இப்படியாக, பயிற்சியாளர் நாகராஜன், 20 க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாராகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் தொந்தரவுக்குள்ளான வீராங்கனைகள் பலர், விளையாட்டிலிருந்து தற்போது வெளியேறி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன், 20 க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர், தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் புகார் அளித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறக்கூடிய பல மாணவிகளும், மாணவிகளின் பெற்றோர்களும் தொடர்ந்து பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் சுமத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார் இது குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கினார்கள்.

இந்த விசாரணையில், பயிற்சியாளர் நாகராஜன், சென்னையிலேயே சுங்கத்துறை கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த புகாரின் பேரில் நந்தனத்தைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது, போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், பயிற்சியாளர் நாகராஜன் திடீரென தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தற்போது அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முக்கியமாக, “பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, காவல் துணை ஆணையர் ஜெயலஷ்மியை (தொலைப்பேசி எண் 9444772222) தொடர்பு கொள்ளலாம் எனவும், புகார் வழங்குபவர்களின் விவரங்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும்” எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.