சென்னை பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது, அந்த பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில், அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கே.கே. நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் எழுந்த பாலியல் புகார் தற்போது தமிழகத்தில் பெரும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் பாலியல் புகாரில் சிக்கினார். அதே போல், சென்னையில் 3 வதாக சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது சென்னையில் 4 வதாக கராத்தே மாஸ்டர் ஒருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதுவும், சென்னை பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது தான், அந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தான், இந்த பாலியல் புகாரை அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். 

அந்த புகாரில், “கடந்த 2014 ஆம் ஆண்டு, சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர், எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் போதும், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்” அவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

அத்துடன், “ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் வழியில், பயிற்சியாளர் கெபிராஜ், காரில் வைத்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், இதற்கு ஒத்துழைக்க நான் மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்” அந்த பெண், புகார் அளித்து உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கெபிராஜை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதன் பிறக, துணை கமிஷனர் ஜவகர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், “அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு வரை அந்த பள்ளியில் பணி புரிந்ததாகவும், அதன் பிறகு பணியில் இருந்து நின்று விட்டதாகவும்” கூறியிருக்கிறார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார், கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதே போல், “கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஏன் அந்த இளம் பெண் பாலியல் புகார் அளித்தார்? இதில் யாருடைய தூண்டுதலும் உள்ளதா?” என்கிற கோணத்திலும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே, அவர் மீது கைது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்றும், காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.