“சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்” அளித்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரும் 8 ஆம் தேதிக்கு குழந்தைகள் நல ஆணையம் விசாரணைக்கு அழைத்து உள்ளது.

சென்னை கே.கே. நகரில் உள்ள புகழ்பெற்ற பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், சக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்து குற்றச்சாட்டில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் அதிரடியாக சிறையில் அடுக்கப்பட்டு உள்ளார். இதே போல், சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து உள்ளன. இது குறித்து தீவிரமாக விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. 

இந்த பரபரப்பான பாலியல் புகார்களுக்கு மத்தியில் தான், சென்னை எம்ஆர்சி நகரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனதாக, முன்னாள் மாணவர்கள் கிட்டதட்ட 900 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, பரபரபரப்பான புகார் அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கிட்டதட்ட 900 பேர், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்குப் பரபரப்பான புகார் கடிதத்தை அளித்து உள்ளனர். 

அந்த புகாரில், “சென்னை செட்டிநாடு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது என்றும், பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பையும் வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டியும், சக மாணவிகளை துன்புறுத்தலில் ஈடுபடுத்தி வந்திருக்கின்றனர்” என்றும், குறிப்பிட்டு உள்ளனர்.

“இது தொடர்பாக, பல ஆண்டுகளாக புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் தரப்பில் எந்த சரியான விசாரணை நடத்தப்படாதது கண்டனத்திற்குரியது என்றும், பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத என பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்று கூட, தற்போது வரை விசாரிக்கப்படவில்லை” என்றும், அந்த புகார் மனுவில் மாணவர்கள் கூறியுள்ளனர்.

“இது போன்ற புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது போன்று பாதிக்கப்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றும், அந்த புகார் மனுவில் பாதிக்கப்பட்ட சக மாணவ - மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர். 

மேலும், “மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையாக பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், பழைய புகார்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்றும், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இந்த புகாரில் வலியுறுத்தி உள்ளனர். 

“தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி” இருக்கிறது.

இதனால்,  சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகிகள் வரும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அந்த பள்ளிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.