தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் வீட்டில் வெடிகுண்டு  வைத்துள்ளதாக மர்ம ஆசாமி  ஒருவர் தொலைபேசி மூலம் சென்னை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு  தொடர்பு கொண்டு  தெரித்துவிட்டு உடனே தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.  

நடிகர் அஜித்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மர்ம நபரின் தொலைபேசி அழைப்பு  தமிழகத்தில் நேற்று முதல் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு விரைந்து சென்று தீவிர பரிசோதனை செய்தனர். கடைசியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பு புரளி என  தெரியவந்தது. 

காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவனேஷை காவல்துறை கைது செய்துள்ளது. கைதான புவனேஷ் ஏற்கனவே பல முக்கிய பிரபலங்களின் வீட்டில் இதே போல வெடிகுண்டு மிரட்டல் புரளிகளை ஏற்படுத்தி கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் அடுத்ததாக   சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டபார்வை திரைப்படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை  பற்றிய எந்தத் தகவல்களும் பெரிதாக வெளியாகாத நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல்களை எதிர்பார்த்து  ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.