“அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?” என்கிற போட்டி ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே தீவிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற போட்டி, அக்கட்சிகுள் தற்போது புதிய உச்சம் பெற்று உள்ளது.

இது குறித்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர்கள் ஒட்டி அதன் மூலமாக மறைமுக யுத்தம் நடத்தி வருவது, அக்கட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிக முக்கியமாக, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான், ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது” என்றும், ஓபனாகவே ஓபிஎஸ் நேற்று பேசினார்.

அப்போது, “அதிமுகவில் குழப்பத்திற்கு காரணமான ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “பொருத்திருந்து பாருங்கள் தெரியும்” என்றும், ஓபிஎஸ் சூசகமாக பதில் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “நான் தொண்டர்களை காப்பாற்றவே இந்த இயக்கத்தில் இருக்கிறேன் என்றும், நாம் ஒற்றுமையாக பணியாற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் இதுவே நமது தலையாய கடமை என்றும், அதைவிடுத்து இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம்” என்றும், தெளிவுப்பட பேசினார். 

குறிப்பாக, “அதிமுகவிற்கு இரட்டை தலைமை சரியானதா இல்லையா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஓபிஎஸ், “இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக செல்கிறது” என்றும், வெளிப்படையாகவே பதில் அளித்தார்.

எனினும், இந்த பிரச்சனை இன்னும் தீராமல், தற்போது புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இவற்றுடன், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக இன்று வரை 5 வது நாளாக தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக வருகை தந்தார். அப்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவரதுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர். இதனால், அதிமுக அலுவலகத்தில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு பக்கம் தீர்மான குழு ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அவருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில் தான், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் செல்லவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி இன்றும் சற்று நேரத்தில் தலைமை அலுவலகம் வந்து அவரும் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.