கணவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த மனைவிக்கு கொடூர தண்டனை அளிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள இந்த வித்தியாசமான மற்றும் கொடூரமான தண்டனையானது, 21 ஆம் நூற்றாண்டின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வந்தார். திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து உள்ளது.

இதன் காரணமாக, அவரது கணவரை விவாகரத்து செய்த அந்த பெண், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வேறு நபருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த தகவல், விவகாரத்து பெற்ற கணவனுக்குத் தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த முதல் கணவன், ஊரில் உள்ள தனது உறவினர்களுடன் சென்று அந்த பெண்ணை, தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், உள்ளூரில் பஞ்சாயத்தைக் கூட்டிய அந்த நபர், பஞ்சாயத்தாரிடம் பேசி, அந்த பெண்ணிற்கு ஒரு கொடூரமான தண்டனை ஒன்றையும் வழங்க வைத்து உள்ளார். 

அதன் படி, அந்த பெண் தனது தோளில் வலுக்கட்டாயமாக இளைஞர் ஒருவரைக் குறிப்பிட்ட தொலைவில் உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுமக்கச் செய்து, அழைத்துச் சென்று உள்ளனர். 

அந்த வீடியோவில், “பெண் ஒருவர், ஒரு நபரைத் தோளில் சுமந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறார். அப்போது, அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஊர் மக்கள் சிலர் குச்சிகள் மற்றும் அங்கு கீழே கிடக்கும் மட்டைகளால் அடித்து, அந்த பெண்ணை வேகமாக நடக்கச் சொல்லி விரட்டி அடிப்பது போலவும்” பதிவாகி உள்ளது.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாநிலத்தின் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள குணா மாவட்ட போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு  இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து உள்ளனர்.

மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்து உள்ளன. பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “மனிதர்களை அடிமை போல் நடத்தும் மிருக குணம் படைத்த மக்கள் இருப்பதற்குச் சான்றாக இந்த சம்பவம் அமைந்துள்ளதாக” பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.