சூழியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது நடவடிக்கைக்குப் பதில் அளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு மாநில பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல சுற்றுச் சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவி, கைது செய்யப்பட்டுள்ளது தான், இந்தியாவில் தற்போது பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. இதற்கு, உலகம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை வரிசையாகத் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினம் அன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் வன்முறை தூண்டப்பட்டதாகக் குற்றம்சாட்டும் டெல்லி காவல் துறை, டிவிட்டரில் உலவிய “டூல்கிட்டையும்” இதற்கு ஆதாரமாகத் தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, “3 புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன விதமான ஹேஷ்டாக் உருவாக்க வேண்டும்? போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியது தான் “டூல்கிட்” ஆகும். 

இந்த “டூல்கிட்டை” பகிர்ந்து தான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதன் பிறகு, இதனை கிரட்டா தன்பெர்க் தனது பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனால், இந்த டூல்கிட்டை எடிட் செய்த, பெங்களூருவைச் சேர்ந்த பிரபல சுற்றுச் சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவி, அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார்.

இதையடுத்து, திஷா ரவி மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல் துறையினர் அதிரடியாக வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, பெங்களூருவில் வைத்து திஷா ரவியை டெல்லி சைபர் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

பின்னர், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட திஷா ரவி, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும், இந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட இரண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் குடியரசு தினத்தன்று வன்முறை சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக, சூம் காலில் பங்கேற்றதாக டெல்லி காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அத்துடன், “கனடாவைச் சேர்ந்த புனீத் என்பவர் தான், நிகிதா ஜேக்கப், சாந்தனு, திஷா ரவி, போயட்டிக் ஜஸ்டீஸ் பவுண்டேஷன் என்ற காலிஸ்தான் அமைப்பு ஆகியோருக்கிடையேயான தொடர்பை ஏற்படுத்தியவர் என்றும், அந்த சூம் ஆப் சந்திப்பானது, கடந்த ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது என்றும், திஷா ரவியின் செல்போனை ஆராய்ந்த போது, அவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தன என்றும், அந்த தகவல்களின் அடிப்படையில் தான் திஷாவை கைது செய்தோம் என்றும். தற்போது இந்த வழக்கில் நிகிதா தலைமறைவாகி உள்ளார்” என்றும், போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூழியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது நடவடிக்கை தொடர்பாகப் பதில் அளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு, மாநில பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி சைபர் குற்றப் பிரிவு காவல் துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள இந்த நோட்டீஸில், “திஷா ரவி மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் 
நகலை அந்த ஆணையம் கேட்டு உள்ளது. 

அவற்றுடன், “திஷாவை ரிமாண்ட் செய்வதற்கு முன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது ஏன்?” என்ற கேள்வியும் மாநில பெண்கள் ஆணையம் எழுப்பி 
உள்ளது. இது, இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.