இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. இதில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தோனியாக நடித்தார். அப்படியே அச்சு அசல் தோனியை போன்றே அங்க அசைவுகளை வெளிப்படுத்தினார். இந்தப் படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் சுஷாந்துக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாக காரணமாயிருந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.

கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தோனி படத்தில் நடித்த மற்றொரு இளம் நடிகரான சந்தீப் நஹார் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோரேகானில் உள்ள அடுக்குமாடி குடியருப்பில் வசித்து வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தோனி படத்தில் இவர் சுஷாந்திற்கு நண்பனாக நடித்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன் சந்தீப் நஹார், வீடியோ ஒன்றை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், திருமண வாழ்க்கை உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் சந்தீப் நஹார். இந்த வாழ்க்கை நரகம் என்றும், தன்னுடைய பட வாய்ப்புகள் கடைசி நேரத்தில் பறிபோகிறது என்றும் உருக்கமாக பேசியுள்ளார். சந்தீவ் நஹாரின் தற்கொலை ரசிகர்கள் மத்தியிலும் பாலிவுட் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.