நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வு விதிமுறைகள் தொடரும் என்றும் அதேநேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டாலும்கூட, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடையில்லை என்றும் வேறு மாநிலங்கள் செல்ல இ-பாஸ் பெறத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அக்டோபர் 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 30 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மார்ச் முதல் இந்தியாவில் பொதுமுடக்கம் இருந்துவரும்போதிலும், கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அதனால் பண்டிகை காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 20 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் நாள்களில், தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு சமீபத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ``கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு உத்தரவிலிருந்து இன்று வரை இந்திய மக்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. லாக்டவுன் முடிவுபெற்றாலும், வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கடந்த 7 முதல் 8 மாதங்களாக ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. அதை ஒரு போதும் மோசமான நிலைக்கு நாம் கொண்டு செல்லக் கூடாது.

பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தங்கள் கடமைகளை நிறைவேற்ற நாள்தோறும் மக்கள் வீடுகளை விட்டு சென்று வருகிறார்கள். பண்டிகைக் காலம் என்பதால் மார்க்கெட்டுக்கு மக்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் இந்த நாடுகளில் கொரோனா கேஸ்கள் குறைவது போல் குறைந்துவிட்டு தற்போது ஒரேடியாக உயர்ந்துவிட்டன. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் கைவிடக் கூடாது. நீங்கள் மாஸ்க் போடாமல் வெளியே வந்தால், உங்கள் அலட்சியத்தால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் குழந்தைகளையும் வயது முதியவர்களையும் கொரோனா எனும் நெருக்கடியில் தள்ளிவிடுகிறீர்கள்.

நம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தடுப்பூசிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். இந்தியாவில் பல கொரோனா தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பல மேம்பட்ட நிலைகளில் உள்ளன" என்றார் மோடி.

இதுவொரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. இதைப்போல  பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் நேற்று புதிதாக 45,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,09,960 ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,014  ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 59,105 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,37,229 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 6,53,717 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 10 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரத்து 778 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும் 9,39,309 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.