தெலங்கானா இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் உறவினர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் அலேக்காக தூக்கிச் சென்ற சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் எல்லாம் புருவம் உயர்த்தி பார்க்கின்றனர்.

“மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தால், எதுவும் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்” என்று, விமர்சிக்கப்படும் அளவில் தான் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. 

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 3 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரை தற்போது தொடங்கி உள்ளன.

அதில், துபாக் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் ரகுநந்தன் என்பவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். ரகுநந்தனின் உறவினர் வீட்டிலிருந்து, வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதாகத் தேர்தல் அதிகாரிகளாக்கு ரகசியத் தகவல் வெளியானது.

இது குறித்து அறிந்த தேர்தல் அதிகாரிகள், அங்குள்ள காவல் துறையினை அழைத்து உள்ளனர். அதன் படி, மாவட்ட காவல் ஆணையர் ஜோயேல் டேவிஸ் தலைமையில் சித்திப்பேட்டில் உள்ள ரகுநந்தனின் உறவினர் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வீட்டிலிருந்து கணக்கில் வராத 18 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

இந்த பணம் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பணத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது, பாஜக தொண்டர்களுக்கும், அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. 

இந்த அசாதாரணமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக தொண்டர் ஒருவர், பாஜக பிரமுகர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திலிருந்து ஒரு கட்டை தூக்கிச் சென்று உள்ளார். அதன் மதிப்பின் ஐந்து லட்சத்து 87 ஆயிரம் என்றும், கூறப்படுகிறது. இதனால், அங்கு தள்ளு முள்ளு இன்னும் அதிகமானது.

அத்துடன். பாஜக தொண்டர் ஒருவர் அந்த பணத்தை எடுக்கும் காட்சிகள் அனைத்தும், காவல் துறையினர் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காவல் துறையினரின் இந்த அதிரடி சோதனைக்கு தெலங்கானா மாநில தலைவர் பந்தி சஞ்சய் குமார், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அத்துடன், காவல் ஆணையர் ஜோயேல் டேவிஸை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ஒரு பக்கம் பாஜக வேட்பாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலேக்கா தூக்கிச் சென்ற பாஜக தொண்டரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடியாக சோதனை செய்ய ஆணையிட்ட காவல் ஆணையர் ஜோயேல் டேவிஸை பணியிட மாற்றம் செய்யக்கோரி நடைபெறும் போராட்டத்தையும் தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனால், அந்த பகுதி போலீசார் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த சம்பவம், தெலங்கானா மாநில அரசியில் கட்சிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.