பாலியல் வழக்குகளில் சர்ச்சை தீர்ப்பு எதிரொலியாக, பெண் நீதிபதியை நிரந்தரமாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பை பெரும்பாலும் யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அப்படி, அதையும் தாண்டி அதனை நாடே விமர்ச்சிக்றிது என்றால், அது தீர்ப்பு கூறிய நீதிபதியை விமர்சிப்பதற்கு ஒப்பாகும். 

அப்படிதான், கடந்த ஒரு வார காலமாக நாடு முழுமைக்கும் இரு தீர்ப்புகள் மிக பெரிய அளவில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டன. அதுவும், அந்த இரு தீர்ப்புகளும் ஒரே நீதிபதி வழங்கிய அடுத்தடுத்த தீர்ப்புகள் ஆகும். 

அதாவது, “கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 39 வயதான சதீஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். இதனால், சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி, குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகக் குற்றவாளி சதிஷ்க்கு, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 7 வது மற்றும் 8 வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது, நாக்பூர் கீழமை நீதிமன்றம். 

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி சதீஷின் தரப்பினர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி புஸ்பா கனடிவாலா, இந்த வழக்கில் சிறுமி உட்பட மற்ற அனைவரின் வாக்கு மூலத்திலும் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை. ஆனால், இது குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 7 வது பிரிவின் கீழ் குற்றமாக வராது என்றும், அதற்கு காரணம், சட்டப்பிரிவு 7 ன் கீழ் சிறுவர்களின் தோல் மீது தோல்பட்டு செய்யப்படும் தாக்குதல் தான் குற்றம்” என்றும், அவர் பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி அளித்த இந்த தீர்ப்பு, நாடெங்கும் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அத்துடன், இந்த தீர்ப்பு அனைத்துப் பெண்களை கேலிக்கு உள்ளாக்குகிறது போல் உள்ளது என அனைத்து தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

குறிப்பாக, “அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டுத் துன்புறுத்துவது பாலியல் வன்கொடுமை கிடையாது” என்று, தீர்ப்பில் அந்த நீதிபதி தெரிவித்து இருந்தார். சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாகத் தான் கருத வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டும் அதை, அந்த அந்த நீதிபதி ஏற்கவில்லை. இது பெரும் விவாத பொருளாக மாறியது. உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் “சிறார்களின் பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் வன்முறை அல்ல” என்று, மும்பை உயர் நீதிமன்றம் கருத்து கூறியது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது, 

முன்னதாக, வழங்கப்பட்ட தீர்ப்பையே மிஞ்சும் அளவுக்கு, தற்போது அதே நீதிபதி, மற்றொரு கருத்தைத் தெரிவித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, இந்த முறை, “சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், பேண்ட் ஜிப்பை கழற்றுவதும் போக்சோ சட்டத்தின் படி பாலியல் வன்முறை அல்ல” என்று, கூறியிருந்தார்.

 “கடந்த 2018 ஆம் பிப்ரவரி 12 ஆம் தேதி, 50 வயது நபர் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி இருந்தார். கடந்த அக்டோபர் மாதம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படி, மானபங்கம், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தலான போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா  கணேடிவாலா, “மானபங்கம் அல்லது பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கில்  சிறுமியின்  வீட்டிற்குள் குற்றம் சாட்டப்பட்டவர் நுழைந்தார் என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், பாலியல் வன்முறை செய்ய நுழைந்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை.

போக்சோ சட்டத்தின் படி, ஆடையைக் கழற்றாமல் மார்பைத் தொடுவது பாலியல் வன்முறை அல்ல. சிறுமியின் கையைப் பிடித்ததாகவும் பேண்ட் ஜிப்பை கழற்றியதாகவும் சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறியுள்ளார். ஆனால், இந்த செயல் பாலியல் வன்முறையின் கீழ் வராது” என்று, அந்த நீதிபதி கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இந்தியத் தண்டனைச் சட்டம் 354-A  -1 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டவர் 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து உள்ளார். அதனால், இதனைக் கருத்தில் கொண்டு அவர் மீது வேறு வழக்குகள் பதிவு செய்யவில்லை என்றால், அவரை விடுவிக்கலாம்” என்றும், நீதிபதி கூறினார். அந்த 50 வயது நபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும், அந்த நீதிபதி நீக்கினார். இந்த வழக்கு, மேலும் ஒரு புயலைக் கிளப்பியது. 

இந்நிலையில் தான், முன்னதாக கூடுதல் நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று கடந்த 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து இருந்தது. ஆனால், இந்த சர்ச்சை தீர்ப்புகளைத் தொடர்ந்து, நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்க செய்யப்பட்ட பரிந்துரையை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் தற்போது ரத்து செய்து உள்ளது. இதுவும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.