தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசையை பிரபலத்தி ஒட்டுமொத்த இசையுலகிற்கும் பெருமை சேர்த்த இசை கலைஞர் சசிதரன் காலமானார். சினிமா ரசிகர்களை இசைக்கடலில் நனைத்த ஏகப்பட்ட பாடல்களுக்கு இவரது பேஸ் கிட்டார் இசை பக்க பலமாக அமைந்தது.

மேலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்களின் கச்சேரிகளிலும் சசிதரனின் பேஸ் கிட்டார் இசை செவிகளுக்கு தேனூட்டும். இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியின் உடன் பிறந்த சகோதரர் தான் சசிதரன் என்பது கூடுதல் தகவல்.

இந்த இசை மேதையின் திடீர் மரணம் இளையராஜாவின் இசைக் கலைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இசை உலக ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் பேஸ் கிட்டாரிஸ்ட் கலைஞர் சசிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, காதல் ஓவியம், ஆசை நூறு வகை என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த இவரது பிறந்தநாளும் இன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பால் இளையராஜா மிகவும் மனம் உடைந்து போயுள்ளதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவரது முகநூல் பக்கங்களை பார்த்த ரசிகர்கள், நேற்று வரை ஆக்ட்டிவாக இருந்த இவருக்கு இப்படி நடக்கவேண்டுமா என்று அதிர்ச்சியில் பதிவு செய்து வருகின்றனர். சசிதரனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், இசை ரசிகர்களுக்கும் கலாட்டாவின் ஆழ்ந்த இரங்கல்.